தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்: குழந்தைகள் பெற்றோருக்கு அளித்த மடல்
கோத்தகிரி: லோக்சபா தேர்தலில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவறாமல், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் ஆணையம், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அந்த மடலை, பள்ளி ஆசிரியர்கள் மூலம், மாணவர்கள் வாயிலாக, பெற்றோருக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.மடலின் விபரம்:அன்புள்ள அப்பாவிற்கு மகள் எழுதிக் கொள்வது. வருகின்ற ஏப்., 19ம் தேதி, நமது ஊரில் உள்ள ஓட்டுச் சாவடியில் தேர்தல் நடைபெற உள்ளதாக எங்களது ஆசிரியை தெரிவித்தார். நீங்களும், அம்மாவும் மற்றும் நம் உறவினர்களும் தவறாது வாக்களிக்க செல்லுமாறு, உங்களது கரங்கள் பற்றி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.தாங்கள் ஓட்டு செலுத்தும் பொழுது, எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், எனது முன்னேற்றத்தை மனதில் வைத்து கொண்டும், சாதி, மதம், இனம் மற்றும் மொழி கடந்து சிந்திக்க வேண்டும். மேலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், நியாயமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்கும்படி, பாசத்துடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த விழிப்புணர்வு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.