உள்ளூர் செய்திகள்

மனது வைத்தால் எந்த உயரத்தையும் எட்டலாம்: மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

மதுரை : மாணவர்கள் மனது வைத்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என நான் முதல்வன் கல்லுாரி கனவு திட்டத்தை துவக்கி வைத்த மதுரை கலெக்டர் சங்கீதா பேசினார்.மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமுக்கத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: மாணவர்கள் படிப்பை சுமையாக நினைக்க கூடாது. அன்றாட கடமையாக கருத வேண்டும். மாணவப் பருவத்தில்தான் தேடல் அதிகம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும். தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவர் சதவீதம் 52 ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட அதிகம். அப்துல் கலாம் கூறியதை போல் எல்லோரும் கனவு காண வேண்டும். அது மிகப் பெரிதாக இருக்க வேண்டும். அதை நோக்கி உங்கள் சிந்தனையை செலுத்துங்கள். படிக்கும் போதே கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனது வைத்தால் எந்த உயரத்தையும் எட்டலாம் என்றார்.மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது: விரும்பிய படிப்பை தேர்வு செய்தால்தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தற்போது ஆன்லைன் வசதி அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது.உயர்கல்வி குறித்த அத்தனை தகவல்களும் உங்களை தேடி வருகின்றன. கல்லுாரி கனவு திட்டம் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சரியான பாதையை காட்டுகிறது. நல்ல கல்லுாரி, படிப்புகள் தொலைவில் இருந்தாலும் தேடிச் சென்று படியுங்கள். கல்விதான் வாழ்க்கையில் கை துாக்கி விடும் என்றார்.போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் மதுகுமாரி, மாநகராட்சி சி.இ., ரூபன் சுரேஷ், எஸ்.இ., முகமது சபியுல்லா, செயற்பொறியாளர் மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன். ஏ.சி.,க்கள் ரங்கராஜன், பார்த்தசாரதி, கல்வி அலுவலர் (பொறுப்பு) ரகுபதி பங்கேற்றனர்.பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளில் மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், வேலம்மாள் மருத்துவ கல்லுாரி முதல்வர் ஜாஸ்மின், ஆடிட்டர் கலாவதி, தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, ஓய்வு ஐ.ஆர்.எஸ்., அதிகாரி நாகலிங்கம், வங்கி மேலாளர் சம்பத், ஓய்வு தாசில்தார் பாலாஜி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்கள் தேன்மொழி, ஜெயமணி பேசினர். நிகழ்ச்சியை சண்முகதிருக்குமரன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்