வெடி மருந்து தொழிற்சாலை அருகே மதுக்கடை மாணவர்கள் பாதிப்பதாக குற்றச்சாட்டு
குன்னுார்: அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அருவங்காடு கார்டைட் வெடி மருந்து தொழிற்சாலை பாதுகாப்பு துறை ஊழியர்கள் சங்க (டி.எப்.எல்.யூ.,) பொதுச் செயலாளர் வெங்கடேஷ் ராவ், நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு:ஊட்டி - குன்னுார் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, பள்ளிகள், மருத்துவமனை பஸ் ஸ்டாப் உட்பட முக்கிய பல நிறுவனங்களுக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையால் இங்கு அன்றாட வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.பள்ளி மாணவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இளம் வயதில் மது அருந்தி உடல்; உள்ளம் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவது வெளிப்படையாக காண்பது வேதனை அளிக்கிறது.இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பொது மக்களின் பாதுகாப்பு, மது போதையில் வரும் நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைக்கு அருகில் மதுக்கடை இருப்பது தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த மதுக்கடையை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வெங்கடேஷ்ராவ் கூறியுள்ளார்.