உள்ளூர் செய்திகள்

செட் தேர்வு தள்ளி வைப்பு கடைசி நேர அறிவிப்பால் குளறுபடி

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில் இன்றும், நாளையும் மாநில அளவில் நடத்த இருந்த கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான செட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அடிப்படை தகுதியான 'செட்' தேர்வு ஆண்டுதோறும் பல்கலைகளால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்த தமிழக அரசு 2023 செப்.,2 ல் அனுமதி அளித்தது.இப் பல்கலை இந்த தேர்வை நடத்தும் பொறுப்பை டெண்டர் மூலம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பொது தேர்வர்களுக்கு ரூ. 2500 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ. 2000, பட்டியல் இனத்தவருக்கு ரூ. 800, மூன்றாம் பாலினத்தவருக்கு கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆன்லைன் தேர்வு என்பதால் கம்ப்யூட்டர்கள் உள்ள கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன.தேர்வுக்கான முழு பொறுப்பையும் ஏற்று நடத்தும் தனியார் நிறுவனம் கடைசி நேரத்தில் கோவை உள்ளிட்ட சில இடங்களில் தேர்வு மையங்களை தவிர கல்லூரிகள் மறுத்துவிட்டதாக கை விரித்தது.இதனால் ஜூன் 7, 8 ல் நடக்க இருந்த செட் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.பல்வேறு மையங்களுக்கும் திருநெல்வேலி பல்கலையிலிருந்து பேராசிரியர்கள் பார்வையாளர்களாக ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில் கடைசி நேர தள்ளிவைப்பால் தேர்வர்களுக்கும், கல்லூரிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டது.இப்பல்கலையில் சொந்த மாணவர்களின் தேர்வை நடத்துவதிலேயே மதிப்பெண் பதிவிடுவதில் கடந்த வாரம் குழப்பம் ஏற்பட்டு பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பல்கலை நிர்வாக குளறுபடிகளால் தமிழகம் முழுவதும் நடக்க இருந்த செட் தேர்வு தள்ளிப் போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்