நீட் மறு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் வழக்கு
புதுடில்லி: மருத்துவப் படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, புதிதாக நுழைவுத் தேர்வு நடத்தக் கோரியும், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், மாணவர்கள் சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றச்சாட்டுநுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்காக, நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு, மே, 5ம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை, 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாயின.கேள்வித்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, இதுவரை இல்லாத அளவாக, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றது, அதிகளவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது என, பல முறைகேடுகள் நடந்து உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., விசாரணை கோரி ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்வை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில், 20 மாணவர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சில மாநிலங்களில் கைது நடவடிக்கையும் நடந்து உள்ளது. குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துவது, தேர்வை எழுதிய மற்ற மாணவர்களுக்கான வாய்ப்பை பறிப்பதாக இருக்கும்.தகுந்த விசாரணைஅதனால், இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., அல்லது தகுந்த விசாரணை அமைப்பின் வாயிலாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இதைத் தவிர, குறிப்பிட்ட சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.