இருப்பது சிறை, போட்டியிடுவது பல்கலை வேந்தர் பதவிக்கு: இம்ரான்கான் ஆசை
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை வேந்தர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் புகாரில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரால் அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.இம்ரான் கான், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் தத்துவவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இப்பல்கலை வேந்தராக உள்ள கிறிஸ் பாட்டன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு போட்டியிட இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது கட்சியை சேர்ந்தவரும், லண்டனில் வசிப்பவருமான சயீத் ஜல்பிகார் புகாரி மூலம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.இப்பல்கலை வேந்தரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும். அக்.,மாதம் இறுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். அம்மாதத்தின் துவக்கம் வரை யார் யார் இத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியிடப்படாது.இம்ரான் கான், ஏற்கனவே பிரிட்டனின் பிராட்போர்ட் பல்கலை வேந்தராக 2005 முதல் 2014 வரை பதவி வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.