உள்ளூர் செய்திகள்

அறநெறியை மக்களிடம் கொண்டு சேர்த்த திருக்குறள்: அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்

திருப்பூர்: தமிழ் வளர்ச்சி துறை, இயல் இசை நாடக மன்றம், திருப்பூர் தமிழ் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து திருக்குறள் திருவிழாவை, இந்திய மருத்துவர் சங்க வளாகத்தில் நடத்தின. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்றார்.அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் திருக்குறள் முற்றோதல் செய்த, மாநிலத்தில் பல்வேறு பள்ளி மாணவர்கள், 147 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் 30 தமிழறிஞர்களுக்கு கேடயம் வழங்கினர்.விழாவில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:தமிழரின் உயர்ந்த அறநெறிகளை உலக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, உயர்த்திப் பிடித்தது திருக்குறள். திருக்குறள் கூறும் அறத்தோடு வாழ்வோருக்கு அரணாய் நிற்கும். அகத்துாய்மை அரும்பு போல் தழைத்து மேலோங்கும். திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக வள்ளுவர் கோட்டம், குமரிக்கடலில் சிலையும் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன், திருப்பூர் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் முருகநாதன், செயலாளர் மோகன் கார்த்திக், இந்திய மருத்துவ கழக கிளை தலைவர் பாண்டிராஜன், செயலாளர் ஆனந்த், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் இளங்கோ உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்