உள்ளூர் செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி, கல்லூரி மாணவர்கள், பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று காலை பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, டிச., 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.சேப்பாக்கம், எழும்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அலுவல் நேரத்தில் கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் நனைந்தவாறே, மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல், மேக மூட்டத்தால் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, பொதுமக்கள் தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்