சமூக வலைதள பதிவு சர்ச்சை;மாணவன் சமூக சேவை செய்ய நிபந்தனை
மதுரை: சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் இருப்பது போல் பதிவு வெளியிட்ட சிறுவனுக்கு ஜாமின் வழங்குவதற்காக, நீதிபதி நூதன நிபந்தனை விதித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவர் ஒரு கல்லுாரியில் படிக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியுடன் இருப்பது போன்ற போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். போலீசார் வழக்கு பதிந்தனர். இரண்டு பேரை கைது செய்தனர்.மாணவனின் தந்தை,தவறான ஆலோசனை காரணமாக பின்விளைவுகள், தீவிரம் தெரியாமல் மகன் வழக்கை எதிர்கொண்டுள்ளார். விருதுநகர் சிறார் நீதிக்குழுமத்தில் மகன் சரணடையும் அதே நாளில் ஜாமின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி எம்.நிர்மல்குமார் கூறியதாவது:மற்ற கைதிகளுடன் சீர்திருத்த இல்லத்தில் மனுதாரரின் மகன் அடைக்கப்பட்டால், பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜாமின் மனு தாக்கல் செய்யும் அதே நாளில் சிறார் நீதிக்குழுமம் பரிசீலித்து, சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஜாமின் வழங்கப்பட்டால் 3 வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகாசி சாட்சியாபுரம் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் சமூக சேவை செய்ய உத்தரவிடலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.