ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரல; டெக்னிக்கல் பிரச்னையால் தவிப்பு
மதுரை: மேலுார் கல்வி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஜனவரிக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இக்கல்வி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகளில் 1200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஜனவரி சம்பளம் இதுவரை கிடைக்கவில்லை. வழக்கமாக சம்பளத்திற்கு முன்பே ஆசிரியர்களின் சம்பள பில் உள்ளிட்ட ஆவணங்கள் அதற்குரிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்படும்.முறையாக பில்கள் பதிவேற்றம் செய்தும் ஆசிரியர்களுக்கு ஒருவாரம் ஆகியும் சம்பளம் கிடைக்கவில்லை.ஆசிரியர்கள் கூறியதாவது: உரிய பில்கள் பதிவேற்றம் செய்யப்பட்டும் இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை. இதுகுறித்து பள்ளிகளுக்கான ஐ.டி., மூலம் ஆய்வு செய்தால் பட்ஜெட் எரர் என வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட டி.இ.ஓ., அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் 20 பள்ளிகளுக்கு சம்பளம் கிடைத்தது. ஆனால் இன்னும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை.இதுதொடர்பான தொழில்நுட்ப பிரச்னைக்கு தீர்வுகண்டு உடனே சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.