உள்ளூர் செய்திகள்

யு.ஜி.சி., விதிகளை மீறி பணியில் தொடரும் கல்லுாரி முதல்வர்கள்

கோவை: பல்கலை மானியக்குழு விதிகளை மீறி, பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், முதல்வராக தொடர்வோர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என, பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதி கல்லுாரிகளில் முதல்வராக பணிபுரிபவர்களுக்கு, பல்கலை மானியக்குழு 2018ல் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதன்படி, கல்லுாரியில் முதல்வராக நியமிக்கப்படுபவர்கள், ஐந்தாண்டுகள் அப்பதவியில் இருப்பர். அவர்களின் செயல்திறன் அடிப்படையில், தேர்வுக்குழுவின் மதிப்பீட்டுக்கு பின், பதவி காலம் நீட்டிக்கப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள, 36 கல்லுாரி முதல்வர்கள், ஐந்து ஆண்டுகள் பணி பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படாமல், தொடர்ந்து முதல்வர்களாக நீடிப்பதாகவும், ஒன்பது முதல்வர்கள், 10 ஆண்டுகள் பணி முடித்த பின்னரும், முதல்வராக நீடித்து வருவதாகவும், பேராசிரியர்கள் குமுறுகின்றனர். இதன் காரணமாக, திறமையான பேராசிரியர்கள் பலருக்கும், முதல்வராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது.பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:பாரதியார் பல்கலையில் கடந்த மாதம் நடந்த செனட் கூட்டத்தில், 36 பேர் கல்லுாரிகளின் முதல்வராக ஐந்து ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கல்லுாரி முதல்வர்கள் ஓரிரு ஆண்டுகளில், 10 ஆண்டுகள் பணி அனுபவத்தை பூர்த்தி செய்ய உள்ளனர்.ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களின், செயல்திறன் மதிப்பிடப்பட்டதாக தெரியவில்லை. யு.ஜி.சி., விதிகளை மீறி முதல்வராக பலர் பணியில் தொடர்வதால், தகுதியிருந்தும் மீதமுள்ளோர் முதல்வராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்