உள்ளூர் செய்திகள்

பள்ளி வாகனங்கள் படையெடுப்பு; கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் பரிதவிப்பு

திருப்பூர் : பள்ளி பஸ்கள் ஆய்வுக்கு வட்டார போக்குவரத்து துறை சரியான இடத்தை தேர்வு செய்யாததால், சான்றிதழ் பெற வந்த பள்ளி பஸ் டிரைவர்கள், ரிங்ரோட்டில் பயணித்த மக்கள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாயினர். முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்யாமல் அவசர கதியில் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் பஸ்களுக்கு ஒப்புதல் வழங்கி அனுப்பி வைத்தனர்.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரத்திலுள்ள பள்ளி வாகனங்கள் தணிக்கை குறித்து, நேற்று முன்தினம் இரவு தான், பள்ளி நிர்வாகங்களுக்கு, வீரபாண்டி - பலவஞ்சிபாளையம் - கோவில்வழி ரிங்ரோட்டில், 15ம் தேதி (நேற்று) காலை பள்ளி பஸ் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் தெரிவித்தனர்.பலவஞ்சிபாளையம் காளி குமாரசாமி கோவில் துவங்கி, கோவில்வழி - செட்டிபாளையம் சந்திப்பு ரோடு வரை, சாலையின் இருபுறமும் காலியிடத்தில் பஸ்கள் மூன்று பிரிவாக நிறுத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம், அவிநாசி, பல்லடம் பகுதி பஸ்கள் ஒரே நேரத்தில் வரவழைக்கப்பட்டிருந்தது. எந்த பகுதி பஸ்களுக்கு எங்கு ஆய்வு நடக்கிறது என்பது குறித்து வழிகாட்டுதல்கள் டிரைவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால், டிரைவர்கள் பஸ்ஸை ஓரிடத்தில் நிறுத்தாமல், அங்கும், இங்கும் பஸ்களை தாறுமாறாக ஓட்டினர். போக்குவரத்து விதிமீறி முன்னேறி வாகனங்களால், நெரிசல் ஏற்பட்டது.எஸ்.பி., பங்கேற்புபள்ளி பஸ் ஆய்வு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் பங்கேற்றார். அவர் புறப்பட்டு சென்றவுடன் அங்கிருந்த போக்குவரத்து போலீசாரும் நகர்ந்து விட்டனர். விரல்விட்டு எண்ணும் போலீசார் மட்டுமே இருந்ததால், ஒரே நேரத்தில் வந்த நுாற்றுக்கணக்கான தனியார் பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.பள்ளி பஸ்களை இயக்குகிறோம் என்ற பொறுப்பை உணராமல், டிரைவர்கள் கிடைக்கும் பாதையில் எல்லாம் முன்னேறி சென்றதால், ரிங்ரோட்டில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நெரிசல் சீராக பள்ளி பஸ் ஆய்வு, அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., வெங்கிடுபதி, வடக்கு ஆய்வாளர்கள் கவின்பாரதி, அவிநாசி பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் குமரன், தெற்கு ஆய்வாளர் நிர்மலாதேவி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.மாற்று ஏற்பாடுதிருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., வெங்கிடுபதி கூறியதாவது:பள்ளி பஸ்களின் ஆவணங்களை வாங்கி முழுமையாக பரிசோதித்த பின்பே இயக்கத்துக்கு அனுப்பி வைத்தோம். மொத்தம், 1,294 பஸ்கள்; இவற்றில், 700 பஸ்கள் நேற்று பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு காரணங்களால், 16 பள்ளி பஸ்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை. பள்ளி பஸ் ஆய்வுக்கு இரண்டு இடங்களில் மைதானம் பார்த்தோம்; இறுதியாக இந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று; அடுத்த முறை தக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும்,' என்றார்.இது தான் பரிசோதனையா...வழக்கமாக பள்ளி பஸ் பரிசோதனை என்றால், பள்ளி பஸ்கள் வரிசையாக நிறுத்தப்படும். ஒவ்வொரு பஸ்களாக ஏறி படிக்கட்டு, இருக்கைகள் நிலை, முதலுதவி பெட்டி, அவசர கால பொத்தான், அவசர கால கதவு உள்ளிட்டவற்றை திறந்து பார்த்து செயல்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்வர். ஆனால், நேற்று பஸ்களின் ஆவணங்களை பார்த்து, ஒப்புதல் வழங்கிய அதிகாரிகள், 50 சதவீதம் பஸ்களுக்குள் கூட ஏறி பார்த்து ஆய்வு செய்யவில்லை. அதிகாரிகள் நிலையறிந்து மேற்கூரை சேதமாகிய, சைடு கண்ணாடி வளைந்த, படிக்கட்டு விரிசல் ஏற்பட்டு உடைந்திருந்த பஸ்களை கூட ஆய்வுக்கு பள்ளி பஸ் டிரைவர்கள் துணிச்சலாக எடுத்து வந்திருந்தனர். பஸ்சில் ஏறி பார்க்க வேண்டிய அதிகாரிகள்; எட்டிப்பார்த்து ஒப்புதல் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்