தென் இந்தியாவில் ஆயுஷ் மருத்துவ மதிப்புப் பயண உச்சிமாநாடு
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற தென் பிராந்திய ஆயுஷ் உச்சிமாநாடு, பிரதமர் மோடியின் உலகளாவிய ஒருங்கிணைந்த சுகாதாரக் குறிக்கோளை அடைவதற்கான முக்கியமான முயற்சியாக அமைந்தது. ஆயுஷ் மருத்துவ மதிப்புப் பயணம் - நல்வாழ்வை ஊக்குவித்தல், உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு, இயற்கை மருத்துவம், யோகா, ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சைகளின் பங்களிப்பை வலியுறுத்தியது.இந்தியாவின் தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகியவை ஆயுஷ் சிகிச்சைகள் மற்றும் நல்வாழ்வு உள்கட்டமைப்பில் முன்னோடிகளாக உள்ளன.நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய ஆயுஷ் இணையமைச்சர், ஆயுஷ் என்பது பாதுகாப்பான, அறிவியல் ஆதாரமிக்க, நிலையான சுகாதார அணுகுமுறை எனக் கூறினார். ஆயுர்வேதம், சித்தா, யோகா, யுனானி, ஹோமியோபதி மற்றும் சோவா ரிக்பா ஆகிய பாரம்பரிய சிகிச்சை முறைகளின் பங்களிப்பை வலியுறுத்தினார்.ஆயுஷ் அமைச்சக இணைச் செயலாளர் திருமதி மோனலிசா தாஷ், இந்த பயணம் இந்தியாவின் நோயாளி மையப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டங்களை உலகளவில் வெளிப்படுத்தும் வாயிலாக அமைகிறது என்றார். 325க்கும் மேற்பட்ட நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சுகாதார பயண சேவையளிப்பவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு, தேசிய மற்றும் மாநில அரசுகளின் ஆயுஷ் மேம்பாட்டு திட்டங்களைப் பகிர்ந்து, இந்தியாவின் சுகாதாரப் பொருளாதார வளர்ச்சியில் ஆயுஷின் பங்கு மற்றும் உலகளாவிய தாக்கத்தை வலுப்படுத்துகிறது.