வாய் அசைவே இனி குரலாக மாறும் ஐ.ஐ.டி.,யின் அசத்தல் கண்டுபிடிப்பு
குவஹாத்தி: குரல் வழி உத்தரவுகளை பின்பற்றி இயங்கும் நவீன கருவிகளை வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளும் இனி பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்பை குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.நவீன யுகத்தில், ஸ்மார்ட் போன்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை நம் குரல் மூலம் கட்டுப் படுத்தும், தொழில்நுட்பம் வந்துவிட்டது. சுவாசக்காற்று வாய்ஸ் கமாண்ட் எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் நவீன உபகரணங்களை பயன்படுத்தி வருகிறோம்.ஆனால், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்த முடிவதில்லை. இந்த குறைக்கு, அசாமின் குவஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி., ஆய்வார்கள் தீர்வு கண்டுள்ளனர்.இதற்காக அவர்கள் புதிய வகை, சென்சார் கருவியை கண்டுபிடித்துள்ளனர். வாய் அசைவு மூலம் வெளியே வரும் சுவாசக் காற்றை கவனித்து, அதை குரல் பதிவாக மாற்றும் வகையில் அந்த சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கை:குரல் ஒலியை எழுப்ப முடியாதோர் வாயை அசைத்து பேச முயற்சித்தாலே போதும், நுரையீரலில் இருந்து வெளியே வரும் அந்த காற்றை ஒலியாக மாற்றித் தரும் வகையில் சென்சார் மேம்படுத்தப்பட்டுள்ளது.நீரின் மேற்பரப்பில் காற்று பட்டால், நுண்ணிய அலைகள் உருவாகும். அந்த அலைகளை தான் இந்த சென்சார் குரல் ஒலியாக மாற்றித் தரும். நவீன கருவிகள் இதன் மூலம் குரலற்றவர்களின் குரலையும், நவீன கருவிகள் பேச்சு ஒலியாக அடையாளம் கண்டு குரலாக அங்கீகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பரிசோதனை கூடத்தில் இந்த கருவியை தயாரிக்க இந்திய மதிப்பில் 3,000 ரூபாய் மட்டுமே செலவாகி இருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதை கொண்டு வரும்போது சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.