உள்ளூர் செய்திகள்

தனியார் பல்கலை மசோதாவை திரும்ப பெற உயர் கல்வித்துறை முடிவு

சென்னை: 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, தனியார் பல்கலை திருத்த சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு, மறு ஆய்வு செய்யப்படும்' என, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக சட்டசபையில் கடந்த 15ம் தேதி, தனியார் பல்கலை திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி சேரும் மாணவ -- மாணவியரின் சதவீதம் அதிகம். இதனால், அதிகளவிலான உயர் கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் துவங்குவதற்கு தேவைகள் உள்ளன.இந்த சூழலில், தற்போது இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்களை, மாநில தனியார் பல்கலைகளாக தரம் உயர்த்தவும், புதிதாக தனியார் பல்கலைகள் துவங்குவதற்கும், தற்போதுள்ள சில வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காகவே, இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.தற்போதைய தனியார் பல்கலை சட்டத்தின்படி, பல்கலை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு, 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப் படுகிறது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், அதுபோன்ற மிகப்பெரிய அளவிலான, தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.எனவே, வேகமாக நகரமயமாகி வரும் தமிழகத்தில், நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருவதால், பல்கலை துவங்க நிலத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த சட்ட திருத்தம் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தெரிவித்த கருத்துகள், சமூக வலைதளம், பொது வெளியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அடிப்படையில், இந்த சட்ட மசோதா குறித்து, கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் அறிவுரையின்படி, இந்த சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு, உரிய மறு ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்