அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் பள்ளி முன் போராட்டம்
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த குமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 89 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஒரு ஆசிரியை என 3 பேர் பணிபுரிகின்றனர். இதில் ஒரு ஆசிரியை மருத்துவ விடுப்பில் உள்ளார்.தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரியும், காலியாக உள்ள இடத்திற்கு நிரந்தர ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தியும் நேற்று பெற்றோர்கள் பள்ளியின் நுழைவு வாயிலை இழுத்து மூடி தங்கள் பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் போலீசார் நேரில் சென்று, காலி பணியிடத்தை நிரப்பக்கோரி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.