உயர் கல்வியே எங்கள் இலக்கு அரசு பள்ளிகளில் வழிகாட்டி நிகழ்ச்சி
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நாளை முதல், 31ம் தேதி வரை, 'உயர் கல்வியே எங்கள் இலக்கு' என்ற நிகழ்ச்சியை நடத்தும்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், உயர் கல்வி கற்கும் வகையில், 'உயர் கல்வியே எங்கள் இலக்கு' என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை, நாளை முதல், வரும் 31ம் தேதிக்குள், ஏதேனும் ஒரு நாளில், இரண்டு மணி நேரத்துக்கு நடத்த வேண்டும். அதில், தற்போது, பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியரும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்க வேண்டும்.அந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் விருப்பம், திறனை அறியும் வகையில், வினாடி வினா, உரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி, அவரவருக்கு ஏற்ற தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வியை பரிந்துரைக்க வேண்டும்.மேலும், உயர் கல்வி கற்க, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகைகள், இட ஒதுக்கீடு, கல்விக் கடன்கள், வேலைவாய்ப்புகள் குறித்து விளக்க வேண்டும். மேலும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.இதற்கான ஏற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் இணைந்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.