உலகம் உங்கள் கையில் திட்ட இலவச லேப்டாப் வழங்க கோரிக்கை
கோவை: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், எல்.எல்.பி., இறுதியாண்டு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கக் கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.உயர்கல்வி மாணவர்களின் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்த, இத்திட்டத்தின் வாயிலாக அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகின்றன.இதில் சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.தங்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டக்கல்லூரி எல்.எல்.பி., இறுதியாண்டு மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர், கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.