தொல்லியலும் கல்வெட்டியலும் சேர்ந்தால் வரலாற்றை சீராக எழுதலாம்: தங்கம் தென்னரசு
சென்னை: “தொல்லியலும், கல்வெட்டியலும் சேர்ந்து இயங்கினால், நம் வரலாற்றை சீராக எழுதலாம்,” என, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.தமிழக தொல்லியல் துறை சார்பில், 'தமிழ் கல்வெட்டியல்' குறித்த, நான்கு நாள் சர்வதேச கருத்தரங்கு, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், நேற்று துவங்கியது. தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், தமிழக 'கீறல்' குறியீடுகள் தொடர்பான இணையதளம் மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் பதிவாகி உள்ளன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு, தென் மாநிலங்களைச் சேர்ந்தவை. தமிழகத்தில் மட்டும், 30,000 கல்வெட்டுகள் உள்ளன.தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், 250க்கும் அதிகமான, பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கரிக்கையூர் 'பாறை' ஓவியங்கள் குறித்த ஆய்வு, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.கோவில் கல்வெட்டுகள், மத மற்றும் பண்பாட்டு தகவல்களை வழங்கினாலும், குமிழி மற்றும் மதகு கல்வெட்டுகள், பழங்கால தொழில்நுட்ப அறிவை, மிகத் தெளிவாக மீளமைக்க உதவுகின்றன. தொல்லியலும், கல்வெட்டியலும் சேர்ந்து இயங்கினால், நம் வரலாற்றை சீராக எழுதலாம்.இவ்வாறு அவர் பேசினார்.