உங்கள் இலக்கை மனக்கணக்கில் காணுங்கள் கல்லுாரி நிகழ்ச்சியில் எஸ்.பி., அறிவுரை
குன்னூர்: மாணவியர், சுய பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும், என நீலகிரி எஸ்.பி., நிஷா அறிவுறுத்தியுள்ளார்.குன்னூர் தாலுகா, கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. நீலகிரி எஸ்.பி., நிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு சாதாரண மாணவி தனது கடின உழைப்பால் முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்., தேர்வில் அகில இந்திய அளவில், 57வது இடத்தை பிடித்து சாதனை புரிந்தார். இவரை போலவே நானும், எனது முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்று காவல் கண்காணிப்பாளராக நிற்கிறேன்.இதில் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் இலக்கை எப்போதும், மனக்கணக்கில் தெளிவாக காணுங்கள். உங்களால் சாதிக்க முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை.இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க வகையில் முன்னேறி வருகின்றனர். அதே வேளையில், மாணவியர், சுய பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும், என்றார்.கல்லூரி இயக்குனர் அருமைராஜ் பேசுகையில், "சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டங்களுக்காக மட்டுமல்ல இது பெண்களின் ஒரு புதிய உறுதியை ஏற்றுக்கொண்டு சமூகத்தில் மென்மேலும் உயர்வதற்கான சிந்தனை நாள். அந்த வெற்றிகரமான பயணத்தை உடனடியாக துவங்க வேண்டும்,'' என்றார்.கல்லூரி பாடகர் குழுவினரின் இசை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.