ஆசிரியர் கண்டிப்பால் மாணவி தற்கொலை முயற்சி; வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்துார் அரசு நடுநிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, 6வது படிக்கும், 12 வயது மாணவி, அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்து வந்தார். இதனால் ஆசிரியர்கள், அவரை திட்டி தாக்கியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கடந்த, 20ல் பள்ளி சென்ற மாணவியை மீண்டும்ஆசிரியர்கள், ஆபாச வார்த்தைகளால் கண்டித்துள்ளனர். இதில் வேதனை அடைந்த மாணவி, பள்ளியில் இருந்து மதியம் வீட்டுக்கு சென்ற நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்கம் அடைந்த நிலையில், மாணவியை மீட்ட பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தனர். மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில், பள்ளியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ஆபாசமாக பேசி அடித்த ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார். இதனால் ஆசிரியர்களிடம் விசாரிக்கின்றனர். மேலும் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவுப்படி, கல்வித்துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று, சேலம் நீதிமன்றம், ஜே.எம்., 5 மாஜிஸ்திரேட் தீர்த்தா, மருத்துவமனையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார்.