உள்ளூர் செய்திகள்

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி; நிமிர்ந்து நில் செல்லமே!

தமிழகத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் என்பது பல குடும்பங்களில் எதிர்பார்ப்பும் பதற்றமும் கலந்த தருணமாக மாறியுள்ளது. சில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறாததால் அல்லது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் தங்களின் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி, மிகுந்த மன அழுத்தத்திற்குள் சென்றுவிடுகின்றனர். மிகவும் வருத்தமளிக்கும் உண்மை என்னவென்றால், சில நேரங்களில் இந்த மனநிலை, தற்கொலை எண்ணத்திற்கும் வழிவகுக்கிறது.தேசிய குற்றப் பதிவுகள் பணியகமான 128 வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் மாணவர் தற்கொலை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023ம் ஆண்டில் மட்டும், 13,892 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது.இந்தியாவில் மாணவர் தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் நான்காவது மாநிலமாக இடம் பெற்றுள்ளது; இது ஒரு எச்சரிக்கை மணி.ஒரு தேர்வு முடிவு, ஒரு மனிதரின் திறமையையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்காது. ஒரு மதிப்பெண் தாளால், ஒரு குழந்தையின் மதிப்பு குறையாது.வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலர், பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில் தோல்விகளை சந்தித்தவர்களே. தோல்வி என்பது முடிவு அல்ல; அது வாழ்க்கை கொடுக்கும் ஒரு தற்காலிக தடையே.மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், 'ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் எழுதலாம்; ஆனால், வாழ்க்கையை இழந்தால் மீண்டும் பெற முடியாது. மதிப்பெண் குறையலாம், ஆனால், தன்னம்பிக்கை மட்டும் குறையக் கூடாது' என்பது தான்!மதிப்பெண் குறைவாக வந்தால் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?முதலில், தனியாக இருக்க வேண்டாம்.பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசுங்கள். பேசுவது பலவீனம் அல்ல; அது ஒரு தீர்வின் தொடக்கம்.உளவியல் நிபுணர்களின் உதவியை நாடுங்கள்; சரியான நேரத்தில் கேட்கப்படும் ஒரு உதவி, ஒரு வாழ்க்கையை காப்பாற்றக்கூடும்!உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.சமூக ஊடகங்களில் வரும் ஒப்பீட்டு அழுத்தங்களை தவிர்த்திடுங்கள்.தோல்வியை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள்.ஒரு மாணவனின் வாழ்க்கையில் கல்வி முக்கியம் தான்; ஆனால் அது, வாழ்க்கையின் முழு அர்த்தமல்ல. கலை, விளையாட்டு, தொழில் திறன், தொழில் முனைவு, சமூகத் திறன், மனிதநேயம் ஆகிய அனைத்தும், வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள்.பெற்றோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.'என் குழந்தை குறைவாக மதிப்பெண் எடுத்திருக்கிறது' என்ற எண்ணத்தை விட, 'என் குழந்தை மனதளவில் பாதுகாப்பாக இருக்கிறதா...' என்ற கேள்வியே முக்கியம். சில நேரங்களில் பெற்றோரின் ஒப்பீடுகள், கண்டிப்புகள், சமூக அழுத்தங்கள், குழந்தைகளின் மனதில் பெரிய காயங்களை ஏற்படுத்துகின்றன.தோல்வியை விட கொடுமையானது, மற்றவர்கள் என்ன நினைப்பர், நண்பர்கள் என்ன சொல்வர், உறவினர்கள் நம்மை எப்படி மதிப்பர் என்ற எண்ணமே.இந்த கேள்விகள் தான், பல மாணவர்களின் மனதை குழப்புகிறது.ஒரு தேர்வு முடிவு, தற்காலிகம் தான்; ஆனால், அந்த நேரத்தில் ஏற்படும் அவமான உணர்வும், ஒப்பீட்டு அழுத்தமும், ஒரு மாணவனை தனிமைக்கும், விரக்திக்கும் தள்ளி விடுகிறது.மாணவர்களே... மற்றவர்களின் கருத்து, உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்காது. ஒரு மதிப்பெண் உங்கள் வாழ்க்கையின் முழு அடையாளம் அல்ல. தோல்வி என்பது, ஒரு தடம் மட்டுமே, அது உங்கள் வாழ்க்கையின் முடிவுக்கோடு அல்ல!'உன்னால் முடியும்' என்ற பெற்றோரின் வார்த்தைகளும், 'நான் உன்னுடன் இருக்கிறேன்' என்று தோள் கொடுக்கும் நண்பர்களின் ஆதரவும், சிதறி போகும் மனதை மீண்டும் எழச் செய்யும் மிகப்பெரிய சக்தி.'மாஸ்டர் மைண்ட்' அறக்கட்டளை மற்றும் ஹஸ்கி தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், 'ஜீவன்லைன்' அமைப்பு, 24 மணி நேர தற்கொலை தடுப்பு இலவச சேவை உதவி மையம்.மன அழுத்தம், தோல்வி பயம், வாழ்க்கை விரக்தி போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, உடனடி உளவியல் ஆதரவை வழங்குகிறது. உதவி கேட்பது பலவீனம் அல்ல; அது ஒரு துணிச்சலான முடிவு.வாழ்க்கை என்பது, ஒரு தேர்வு முடிவை விட மிகப்பெரியது. இன்று தோல்வி போல தோன்றுவது, நாளை உங்களை வெற்றிக்குக்கொண்டு செல்லும் பாதையாகவும், அனுபவமாகவும் மாறும்.மாணவர்களே... நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்; வாழுங்கள்; பேசுங்கள்; உதவி கேளுங்கள்!வாழ்க்கை உங்களுக்காக இன்னும் நிறைய வாய்ப்புகளை வைத்திருக்கிறது!24x7 தற்கொலை தடுப்பு உதவி எண்: 1800 2028 760- டாக்டர் லக் ஷ்மி டி.கே., ஜீவன்லைன், மூத்த உளவியலாளர் மற்றும் மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளையின் நிறுவனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்