தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: தி.மு.க., மாஜி மகேஷுக்கு நெருக்கடி?
சென்னை: அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அளித்த புகாரால், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் சென்னையில் வழங்கினார். இது குறித்து, தனியார் பள்ளி கூட்டமைப்பினர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதாவது, 'தமிழகத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க, முந்தைய ஆட்சியினருக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், த.வெ.க., ஆட்சியில் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம்' என, அந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.இதன் வாயிலாக, கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி உள்ளன.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆட்சி காலத்தில், பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் பணியிட மாறுதல், 'ஸ்மார்ட்' வகுப்பறை திட்டம், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் என, தொட்ட இடமெல்லாம் ஊழல் மலிந்து கிடந்தன.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில், அப்போதைய அமைச்சர் மகேஷுக்கு நெருக்கமான மூவரணி தான், இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டது.முன்னாள் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஒருவரும், நெருங்கிய உறவினர் ஒருவரும், மகேஷுக்கு பி.ஏ.,வாக இருந்தனர். அவர்களோடு, தி.மு.க., செய்தி தொடர்பு குழுவின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும் இணைந்து வசூல் செய்துள்ளார்.ஆசிரியர் பணியிட மாறுதல், தனியார் பள்ளி அங்கீகாரம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த வசூலுக்காகவே, சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அலுவலகத்தை வைத்திருந்தனர்; முறைப்படி வழங்க வேண்டிய அங்கீகாரத்தை, லஞ்சம் வாங்கிய பின்னும் வழங்காமல் இழுத்தடித்து உள்ளனர்.அந்த கோபத்தில் தான், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் வெளிப்படையாக பேட்டி கொடுத்தனர். அதன் வாயிலாக, இந்த முறைகேட்டை தற்போதைய அரசு தோண்டி எடுத்துள்ளது.தனியார் பள்ளிகள் சார்பாக அளிக்கப்படும் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 'மாஜி' அமைச்சர் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.