உள்ளூர் செய்திகள்

கோவை அண்ணா பல்கலைக்கு வேறு நிலம் தேர்வு செய்ய முடிவு

கோவை: கோவை அண்ணா பல்கலை அமைக்க, கோவை- பாலக்காடு மெயின் ரோடு, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டுமே இருந்த அண்ணா பல்கலை, நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு கோவை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டது. கோவை அண்ணா பல்கலைக்கென கோவையில் தனி கட்டடம் எதுவும் இல்லை. இதனால், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியின் (ஜி.சி.டி.,) ஒரு பகுதியில் கோவை அண்ணா பல்கலைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன், ஜி.சி.டி., கல்லூரியின் முழு சொத்துக்களையும் கோவை அண்ணா பல்கலை வசம் ஒப்படைக்க வேண்டும்; அந்த கல்லூரி, கோவை அண்ணா பல்கலை என்றே அழைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இதற்கு ஜி.சி.டி., கல்லூரி மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜி.சி.டி., கல்லூரியை கையகப்படுத்தி கோவை அண்ணா பல்கலையாக மாற்றும் முடிவை அரசு நிறுத்தியது. இதுபற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, “ கோவை அண்ணா பல்கலைக்கு தனி இடம் பார்க்கப்பட்டு வருகிறது. கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியை, பல்கலையாக மாற்ற மாட்டோம். கிண்டியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியைப் போல், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியும் செயல்படும். கோவை அண்ணா பல்கலை தனியே செயல்படும். இவை இரண்டுக்கும் அரசு நிதியுதவி அளிக்கும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்