உள்ளூர் செய்திகள்

வரலாற்று தகவல்களை இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும்

தஞ்சாவூர்: "வரலாற்று தகவல்களை சேகரிப்பது குறித்து இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவசியம்" என நாணயவியல் கழக நிறுவன தலைவர் கூறினார். தஞ்சையில் சோழமண்டல நாணயவியல் கழக, 13ம் ஆண்டு விழா, 18வது நாணய கண்காட்சி கடந்த, இரண்டாம் தேதி துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை, மூன்று நாட்கள் நடந்த நாணய கண்காட்சி விஜயா திருமண மண்டபத்தில் நடந்தது. கண்காட்சியில் தஞ்சை பள்ளி மாணவ, மாணவியர் மாலினி, ராகவி, ஸ்ரீதர், ரங்கநாதன், அபித்தா, விஜயசாந்தி, பிரகதி, கீர்த்திவாசன், ஹரிஹரன், செந்தூரன் மற்றும் கோவை, சேலம், நீலகிரி பகுதியைச் சேர்ந்த நாணய சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் பங்கேற்று, அபூர்வ தபால்தலை, ரூபாய் நோட்டு மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். தொடர்ந்து வினாடி-வினா நிகழ்ச்சியில், 21 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தஞ்சை பாரத மாதா நடுநிலைப்பள்ளி முதல் பரிசையும், தாமரை சர்வதேச பள்ளி, இரண்டாம் பரிசையும், அக்ஸீலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் பரிசையும் பெற்றது. பரிசளிப்பு விழாவில், சோழமண்டல நாணயவியல் கழக நிறுவன தலைவர் துரைராசு தலைமை வகித்து பேசுகையில், "வரலாற்று தகவல்களை சேகரிப்பது குறித்தும், பழம்பெரும் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்தும், தேசத்துக்கு உழைத்த தியாகிகள், தலைவர்கள் பணிகள் பற்றியும், இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவசியம். இப்பணியை சோழமண்டல நாணயவியல் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்