உள்ளூர் செய்திகள்

சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் கைது: பா.ஜ., கண்டனம்

சென்னை: பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கைது, நேர்மையான துணைவேந்தர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். இதில் கவர்னர் தலையிட வேண்டும் என பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.வர்த்தக நிறுவனம் துவங்கியதாக அளித்த புகாரில், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகந்நாதன், 68, கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இது குறித்து பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை ஆதாரமில்லாமல் போலீசார் கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் ஒரு நேர்மையான கல்வியாளர் என்று மாநிலத்தில் பலராலும் மதிக்கப்பட்டு வருபவர். ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கைது செய்யப்பட்டு இருக்கிறார்.பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஆரம்பித்து அதன் மூலம் நிதி இழப்புக்கு காரணமாக இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அது சம்பந்தமாக நேரில் அவரைச் சந்தித்துப் பேச சென்றபோது தனது ஜாதியைச் சொல்லி திட்டியதாகப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் எஸ்சி மற்றும் எஸ்டி சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் ஒன்பது பிரிவுகளில் அவர் மேல் வழக்கு பதியப்பட்டுள்ளது.விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், மாலையில் வழக்குப் போட்டு இரவு நேரத்தில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, உடனே சிறைக்கு அனுப்ப போலீசார் முயற்சி செய்துள்ளது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. மேலும் மறு நாள் துணைவேந்தரின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியவை இரவு முழுவதும் பல மணி நேரம் சோதனை செய்யப்பட்டுள்ளன. எனவே துணைவேந்தரின் பெயர் பொதுவெளியில் இழிவு படுத்தப்பட்டுள்ளது.இதற்கு எப்படி மாநில உயர்கல்வித்துறை அனுமதி கொடுத்தது எனத் தெரியவில்லை. மாநில அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் நேர்மையான துணைவேந்தர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை உண்டாக்கும் எனக் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநில முதல்வர் நடவடிக்கை வேண்டும். மாநில அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். கல்வித் துறையை களங்கப்படுத்திய இந்த தவறான செயல்களுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.விசாரணை அதிகாரி மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மேல் மாநில அரசு உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்