புதிய ரக திராட்சை சாகுபடி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு!
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து இந்திய தோட்டக்கலை விஞ்ஞானிகள் காய்கறி பயிர்கள், திராட்சை உள்ளிட்ட பழங்களின் புதிய ரகங்களை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் திராட்சை மழை, பனி காலங்களுக்கு எதிரியாகும்.மழை காலங்களில் பழம் உடைந்து வீணாகி போகும். பனி காலங்களில் செவட்டை நோய் தாக்குதல் ஏற்படும். இதனால் திராட்சை விவசாயிகள் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் மழை காலத்தில் அதிகபடியான ஈரப்பதம், நீரை தாங்கி வளர்வதுடன், பழம் உடையாமல் இருக்கும் புதிய ரகம் ஒன்றை நாசிக் நகரில் இஸ்ரேல்- இந்தியா விஞ்ஞானிகள் கூட்டாக கண்டறிந்து உள்ளனர்.ஆராய்ச்சி முடிவுகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் அனுமதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் கம்பம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா தலைமையில் தமிழக தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், விவசாயிகள் குழு ஒன்றை தமிழக தோட்டக்கலைத்துறை அனுப்பி வைத்தது.இரண்டு நாள் பயிற்சி முடித்து வந்துள்ளனர். அவர்கள் பயிற்சி முடித்து வந்து 4 மாதங்களுக்கு மேலாகி விட்டது. எனவே புதிய ரக திராட்சை கொடி வேர் குச்சிகளை வாங்கி வந்து கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.