உள்ளூர் செய்திகள்

குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக மாணவிக்கு தங்கப்பதக்கம்

சென்னை: பிரதமரிடம் தங்கப்பதக்கம் பெற்ற தமிழக மாணவி அம்ரித் மெல், கல்லுாரி படிப்புக்கு பின், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.சமீபத்தில் டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணி வகுப்பில், தேசிய மாணவர் படை ராணுவப்பிரிவில், தமிழகத்தில் இருந்து, 124 தேசிய ராணுவப்படை மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட, கோவையை சேர்ந்த, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி மாணவி அம்ரித்மெல், தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி பதக்கம் வழங்கி பாராட்டினார்.விமானப்படை பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி மாணவி மஞ்சுஸ்ரீ, வெண்கலப் பதக்கம் வென்றார். இவர்களை தேசிய மாணவர் படையின் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் பகுதி துணை இயக்குனர் ஜெனரல் அதுல் குமார் ரஸ்தோகி நேற்று என்.சி.சி., தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.ராணுவ பிரிவில் தங்கம் வென்றது குறித்து, மாணவி அம்ரித் மெல் கூறியதாவது:குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இரண்டு மாதங்களுக்கு மேலாக பயிற்சியில் ஈடுபட்டோம்; அதற்கு பலன் கிடைத்துள்ளது. பிரதமர் கையில் பதக்கம் வாங்கியபோது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. என் கனவு நிறைவேறியது. இதற்கு கல்லுாரி நிர்வாகமும், பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். உயர் கல்வியை முடித்த பின், ராணுவத்தில் சேர்ந்து,நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.விமானப்படை பிரிவில் வெண்கலம் வென்ற மஞ்சுஸ்ரீ கூறியதாவது:நாடு முழுதும் இருந்து வந்த மாணவர்கள் மத்தியில், மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என் வெற்றிக்கு உதவிய பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி. கல்லுாரியில் செலவிட்ட நாட்களை விட, என்.சி.சி.,யில் இருந்த நாட்களே அதிகம். கல்விக்கு பின் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்