பிசியோதெரபிஸ்ட்களை டெக்னீசியன் என அழைப்பதா தமிழக அரசுக்கு எதிர்ப்பு
மதுரை: பட்ட படிப்பை படித்த பிசியோதெரபிஸ்ட்களுக்கு டெக்னீசியன் என பதிவு சான்றிதழ் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு பிசியோதெரபிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மதுரையில் இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் தமிழ்நாடு கிளை தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: தமிழக அரசு, பிசியோதெரபிஸ்ட்கள், லேப் டெக்னீசியன்கள், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் என பத்து துறைகளை உள்ளடக்கி ஸ்டேட் அலைடு அண்ட் ஹெல்த்கேர் புரொபஷன்ஸ் கவுன்சில் அமைப்பதற்கான விதிமுறைகளை அரசாணையாக கடந்தாண்டு டிச.,15ல் அரசு வெளியிட்டது.2008 தி.மு.க., ஆட்சியில் நடந்த மாதிரியே பிசியோதெரபிஸ்ட்களை கலந்து ஆலோசிக்காமல் பிசியோதெரபி துறை சம்பந்தப்பட்ட விதிமுறைகளை தற்போதும் அறிமுகப்படுத்தி உள்ளனர். மற்ற மாநிலத்தில்கூட இல்லாத சில விதிமுறைகளை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். குறிப்பாக நான்கரை ஆண்டு பட்ட படிப்பை படித்த பிசியோதெரபிஸ்ட்களுக்கு டெக்னீசியன் என பதிவு சான்றிதழ் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலில் உறுப்பினராக பிசியோதெரபிஸ்ட்கள் பதிவு செய்ய டாக்டரிடம் நற்சான்றிதழ் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் உள்ள இதே அலைய்டு அண்டு ஹெல்த்கேர் புரொபஷன்ஸ் கவுன்சில் சட்டத்தில் பிசியோதெரபிஸ்ட் ஆக பதிவு செய்ய பிபிடி (பிசியோதெரபி பட்ட படிப்பு) குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு விதிமுறைகளில் டிப்ளமோவும் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதை நீக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.