பல்கலை கவுன்சில் உறுப்பினர் பதவி நிபந்தனையை நீக்க கோரிக்கை
சென்னை: கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர் பிரதிநிதிகளை, அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை பல்கலையின் பதிவாளருக்கு, பேராசிரியர் பேரவை பொதுச்செயலர் எஸ்.எஸ்.சுந்தரம் அனுப்பியுள்ள கடித விபரம்:சென்னை பல்கலைக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பல்கலையில் இருந்து இரண்டு ஆண்டுகளாக, நியமனத்துக்கான கல்வித்தகுதி ஒப்புதல் வழங்கப்படவில்லை.கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.யின் உத்தரவுப்படி, ஊதியம் நிர்ணயிக்கப்படாததால், இந்த ஒப்புதல் வழங்கவில்லை என, பல்கலை தெரிவித்து உள்ளது.இந்நிலையில், கல்வித்தகுதி ஒப்புதல் வழங்காத காரணத்தை கூறி, அவர்களை பல்கலையின் அகாடமிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக நியமிக்க, பல்கலை அனுமதிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் வேறு எந்த பல்கலையிலும், இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. சென்னை பல்கலையில் மட்டுமே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலையின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்களில் இருந்து, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளை நீக்கி, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர் பிரதிநிதிகளை, அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.