உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு பணி ஒதுக்கீட்டில் யார் யாருக்கு: ஆசிரியர்கள் போர்க்கொடி

திருப்பூர்:அடுத்தமாதம் முதல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. தற்போது தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு துவங்கியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தேர்வுப் பணிகள் ஒதுக்கீட்டில் சங்கங்கள், அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் அருகே உள்ள மையங்களுக்கும், சில குறிப்பிட்ட தனியார் பள்ளி மையங்களுக்கு பணிகள் பெறுவதில் கடும்போட்டி இருக்கும். இதனால் தேர்வுப் பணிக்கு முன் கல்வி மாவட்டம் வாரியாக ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிட்டு அதன் பின் பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் பாண்டி, செயலாளர் முத்துக்குமார் கூறியதாவது:மாவட்டத்தில் 123 பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு வினாத்தாள் கட்டு பாதுகாவலர், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், பறக்கும் படை, அறைக் கண்காணிப்பாளர்கள் என பல்வேறு நிலைகளில் தேர்வுத் துறை வழிகாட்டுதல்படி பணிகள் ஒதுக்கப்பட வேண்டும்.இதில் முன்னுரிமை அடிப்படையில் சீனியர்களுக்கு அவர்கள் வசிக்கும்இடத்தில் இருந்து அருகே உள்ள மையங்களில் நியமிக்கப்படுவர். இதன் வெளிப்படை தன்மைக்காக சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படும்.அதை வெளியிட கோரிக்கை வைத்தும் இதுவரை கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால்பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த தேர்வுகளில் சிபாரிசு அடிப்படையில் ஜூனியர் ஆசிரியர்கள் அருகே உள்ள சிலருக்கு குறிப்பிட்ட தனியார் பள்ளி மையங்களுக்கும், சீனியர்களுக்கு தொலைவில் உள்ள மையங்களுக்கும் பணி ஒதுக்கியது.சிலருக்கு அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஒரே மையங்களில் நியமிக்கப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை தவிர்க்க சீனியாரிட்டி பட்டியல் வெளியிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்