பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி
தேனி: தமிழகத்தில் மார்ச் 26ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், பகுதி உதவி பெறும், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் 156,உயர்நிலைப்பள்ளிகள் 66 செயல்படுகின்றன. இதில் 10ம் வகுப்பில் 14,477 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 68 மையங்களில் தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் 725 ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர்களாக பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் சின்னராஜீ தலைமை வகித்தார். சி.இ.ஓ., இந்திராணி, இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., வசந்தா முன்னிலை வகித்தனர்.பயிற்சியில், அறைகண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களுக்கு 8:30 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும். கணித தேர்விற்கு வழங்கப்படும் கிராப் சீட், சமூகவியல் தேர்விற்கு வழங்கப்படும் வரைபடங்கள் தேவையான அளவு உள்ளதா என சரிபார்த்து அறைக்கு செல்ல வேண்டும்.தேர்வு முடிந்து மாணவர்களிடம் பெற்ற விடைத்தாளில் கடைசி பக்கத்தை கவனித்து சீல் வைக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.