பா.ஜ., வேட்பாளருக்காக டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்
திருவனந்தபுரம்: மத்திய இணையமைச்சரான வி.முரளீதரனின் வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை, ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே அங்கிருந்து தாயகம் திரும்ப உதவியதற்காக மாணவர்களே திரட்டி பணம் செலுத்தியுள்ளனர்.கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.,26ல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (ஏப்.,4) நிறைவடைகிறது. இதில் ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின்னர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களே முரளீதரனின் வேட்புமனுவுக்கான டெபாசிட் தொகையை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரின்போது அங்கு மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' என்ற மீட்பு திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு தாயகம் திரும்பி வர உதவியது. இதில் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த முரளீதரன் முக்கிய பங்காற்றினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை மாணவர்களே சேகரித்து செலுத்தியுள்ளனர்.இது தொடர்பாக மாணவி சாய் ஸ்ருதி கூறுகையில், நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு அமைச்சர் முரளீதரன் உதவியதை எங்களால் மறக்கவே முடியாது என்றார். அவர் ஆற்றிங்கல் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டவுடன், மற்ற மாணவர்கள் சேர்ந்து டெபாசிட் தொகையை திரட்டியுள்ளனர். அதனை மாணவி சாய் ஸ்ருதி, தங்கள் பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு வந்து அளித்துள்ளார். அந்த தொகையை டெபாசிட் செய்து முரளீதரன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.