அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வில் அலைமோதிய மாணவர் கூட்டம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 168 இடத்துக்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலை பகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த நிலையில், 2024 - -25ம் கல்வி ஆண்டுக்கான, இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதற்கான கலந்தாய்விற்கு பெற்றோருடன் மாணவ, மாணவியர் வந்திருந்தனர். இதனால் கல்லூரியில் கூட்டம் அலைமோதியது. கல்லூரி முதல்வர் கானப்பிரியா கலந்தாய்வை துவக்கி வைத்தார்.இதுகுறித்து கல்லூரி முதல்வர் கானப்பிரியா கூறியதாவது:கல்லூரியில் இன்று (நேற்று) பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸில் தலா, 60 இடங்களும், வேதியியல், இயற்பியலில் தலா, 24 இடங்கள் என மொத்தம், 168 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.ஆனால் இந்த கலந்தாய்வில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற்றது. துறைத்தலைவர்கள் சரிபார்த்த விண்ணப்பங்களை, அட்மிஷன் கமிட்டி குழுவினர் ஆய்வு செய்து, யாருக்கு இட ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்படும்.மேலும் பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.ஏ., ஆங்கிலம், பொருளியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை என, ஐந்து பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.ஐந்து பாடப்பிரிவுக்கும், தலா, 60 இடங்கள் என, மொத்தம், 300 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். பின்பு, 12ம் தேதியிலிருந்து, 15ம் தேதி முடிய நான்கு நாட்கள், அனைத்து பாட பிரிவுகளில் உள்ள, காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.எனவே, கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இணையதள விண்ணப்பம், கலந்தாய்வு அழைப்பு கடிதம், மாற்றுச் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம், பத்தாம் வகுப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், 5 போட்டோக்கள் ஆகியவற்றை கலந்தாய்வுக்கு வரும் போது உடன் எடுத்து வர வேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களிலும் நான்கு ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் கூறினார்.