புதுச்சேரியில் முதுநிலை நீட் தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை மருத்துவம் படிக்க இருக்கும் மருத்துவர்களுக்கு புதுச்சேரியிலேயே நீட் தேர்வு மையம் அமைத்துத் தரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசினார்.சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:புதுச்சேரியில் இளங்கலை மருத்துவம் முடித்து முதுநிலை மருத்துவம் படிக்க இருக்கும் மருத்துவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு புதுச்சேரியை தவிர்த்து நீண்ட துாரம் உள்ள ஐதராபாத், கோவை மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு அழைத்து செல்வது ஏற்புடையதல்ல.இதற்காக அரசின் பணம் விரையமாவதுடன் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.சென்னையில் இருப்பவர்களுக்கு அங்கேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் இருப்பவர்கள் மட்டும் மற்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதின் நோக்கம் என்ன.புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் மற்றும் பொறியியல் கல்லூரியில் மட்டும் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதும் வசதி உள்ளது. அனைத்து வசதிகள் கொண்ட தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.முதுநிலை மருத்துவத்திற்காக நீட் தேர்வு எழுதுபவர்களை அலைய வைப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இந்த ஆண்டு முதல் நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கேயே நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு நீட் தேர்வு மையத்தை தேர்வு செய்து அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.தொடர்ந்து பேசிய நாஜிம் எம்.எல்.ஏ., இதே கருத்தை வலியுறுத்தினார்.சபாநாயகர் செல்வம்: இதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார் என கூறி விவாதத்துக்கு முற்று புள்ளி வைத்தார்.