தனியார் பஸ்சில் தொங்கியபடி பயணித்த மாணவர் விழுந்து காயம்
புதுச்சேரி: தனியார் பஸ்சின் பின்பக்க ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லுாரி மாணவர் கிழே விழுந்து காயமடைந்தார்.புதுச்சேரியில் இருந்து நகர பகுதி மற்றும் கிராம பகுதிகளுக்கு 90 சதவீதம் தனியார் பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலிக்காமல் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர். அதுமட்டும் இன்றி வேக கட்டுப்பாட்டு கருவியை கழற்றிவிட்டு, அதிவேகத்தில் செல்லும் பஸ்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.கிராமப்பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், பீக் ஹவர்ஸ் என கூறப்படும் காலை மாலையில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.நேற்று காலை புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி சென்ற பி.ஓய்.05.எச்.7299 எண்ணுடைய என்.ஜே.எம்.ஆர்.எம்., என்ற தனியார் பஸ்சில் கல்லுாரி மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பயணித்தனர்.படிகட்டுகளிலும், பஸ்சின் மேல் பகுதி, பின்பக்க ஏணியில் தொங்கி கொண்டு பல மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்தனர்.அரியூர் தனியார் மருத்துவமனை அருகே பஸ் சென்றபோது, படிக்கட்டில் தொங்கி கொண்டிருந்த கல்லுாரி மாணவர் நிலைதடுமாறி கிழே விழுந்தார். இதில் மாணவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல கூடாது என போக்குவரத்து துறை எச்சரித்தாலும், லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் சில தனியார் பஸ்களில் பயணிகள் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.