போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு பேராசிரியர்கள் நலச்சங்கம் அறிவிப்பு
புதுச்சேரி: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய மாநிலத்தின் நான்கு பகுதிகளிலும் பணிபுரியும் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் 2018ம் ஆண்டு பல்கலைக்குழு மானியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி, 25ம் தேதி உயர்கல்வித்துறை இயக்குனரகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்.இந்நிலையில், உயர்கல்வித்துறை இயக்குனர் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மூன்று மாதங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து ஆவண செய்வதாக உறுதி அளித்தற்காக, கவர்னர், முதல்வர், கல்வித் துறை அமைச்சர் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கல்வித் துறை செயலருக்கும் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.