இளைஞர்களுக்கு ஸ்டார்ட் - அப் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன
திருப்பூர்: இளைஞர்களுக்கு ஸ்டார்ட் - அப் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என திருப்பூர் நிப்ட் - டீ அடல் இன்குபேஷன் மைய ஆலோசகர் பெரியசாமி கூறினார்.அவர் கூறியதாவது:பின்னலாடை தொழில், உற்பத்தி திறன் மற்றும் நிலைத்தன்மையை கணிசமாக மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. 3டி பின்னல் போன்ற கண்டுபிடிப்புகள், தடையற்ற ஆடை உற்பத்தியை எளிதாக்குகின்றன. கழிவு மற்றும் தொழிலாளர் செலவினங்களை குறைக்கின்றன.சுகாதாரக்கண்காணிப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், சென்சார் பொருத்தப்படுகிறது. ஸ்மார்ட் டெக்ஸ்டைல் துறையில், விளையாட்டு ஆடைகள் பிரபலமாகி வருகின்றன. மறுசுழற்சி நுாலிழைகள், மக்கும் இழைகள், நீரில்லாமல் சாயமிடுவது உள்ளிட்ட நடைமுறைகள், புதிய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.ரோபோட்டிக் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், தரமான ஆடைகளை விரைவாக உற்பத்தி செய்ய வழிகாட்டுகின்றன.வட்ட பின்னல் இயந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன் தொழில்நுட்ப ஜவுளி வளர்ச்சியை ஆதரிக்கின்றன. கூட்டு முயற்சியாக, ஸ்மார்ட் நிட்பேர் என்ற உயர்தரத்தை கட்டமைக்கின்றன.இளைஞர்களுக்கு, ஸ்டார்ட் அப் வாயிலாக புதிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன; சரியாக பயன்படுத்திக்கொண்டால், வாழ்வில் முன்னேறலாம்.