தமிழறிஞர்கள் பஸ் பயணத்தில் துணை செல்வோருக்கும் இலவசம்
திருப்பூர்: தமிழறிஞர்கள், தங்களுடன் ஒருவரை அரசு பஸ்களில் இலவசமாக அழைத்து செல்ல, போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.சுதந்திர போராட்ட வீரர்கள், மொழி போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டோருக்கு, அரசு பஸ்களில், மாநிலம் முழுதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.பெரும்பாலானோர் வயது முதிர்வு காரணமாக, தனியாக பஸ்களில் செல்ல இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும், கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, அரசாணை வெளியிடப்பட்டும், இந்த சலுகைகளை நடத்துனர்கள் முறையாக பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில், தமிழறிஞர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல், பஸ்சில் பயணம் மேற்கொள்ளும் வகையில், இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் இருந்து, அனைத்து கோட்ட, கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.