முன்னாள் துணைவேந்தர் மீதான புகாரை விசாரித்து முடிக்க கெடு
சென்னை: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரின் விசாரணையை, ஆறு மாதங்களில் முடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்; இவர், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், மனைவி மற்றும் அவரது பெயரில் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.கடந்த ஜூலையில் அளித்த இந்த புகார் மனுவை பரிசீலித்து, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மற்றும் எஸ்.பி.,க்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மாணிக்கம் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதி என்.சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.இளங்கோ ஆஜரானார். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பிரதாப், ஆரம்பகட்ட விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை எஸ்.பி., துவங்கி உள்ளார். விசாரணை முடிந்த பின், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதையடுத்து நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவில், உரிய நடைமுறைப்படி விசாரணையை முடித்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கையை, லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி., எடுக்க வேண்டும்.இந்த நடவடிக்கையை, உத்தரவின் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.