குழந்தைகளுக்கான தடுப்பூசி உற்பத்தி தமிழக அரசு துவக்க முன்வருமா?
மதுரை: நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு காப்புரிமை பெற்று, மருத்துவக்கல்வி இயக்குனகரம் வாயிலாக, டைபாய்டு, இன்புளூயன்ஸா தடுப்பூசி உற்பத்தி மையத்தை துவக்கினால், தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்படும் கட்டண தடுப்பூசிகளை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்த முடியும்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான 90 சதவீத தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. இன்புளூயன்ஸா, நிமோகாக்கல், டைபாய்டு தடுப்பூசிகளின் கட்டணம் அதிகம் என்பதால், இவை அரசு மருத்துவமனைகளில் போடப்படுவதில்லை.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இன்புளூயன்ஸா தடுப்பூசி ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதோடு விலையும் அதிகம். டைபாய்டு தடுப்பூசி ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும் என்றாலும், இதன் விலையும், 1,800 முதல் 2,000 ரூபாய் வரை என்பதால், அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவதில்லை.பிரிப்பது கடினம்தனியார் மருத்துவமனைகளில், இவை கட்டணத்திற்கு செலுத்தப்படுகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள், நோய் வந்தாலும் அதன் வீரியத்தை குறைக்கும் தன்மையுடையவாக உள்ளதால், இது தேவை, இது தேவையில்லை என்று பிரிப்பது கடினம்.குறிப்பாக, 1 முதல் ஒன்றரை வயதுக்குள், டைபாய்டு தடுப்பூசி செலுத்தினால், பிற்காலத்திலும் டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.இன்புளூயன்ஸா தடுப்பூசியை குறைந்தபட்சம் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் செலுத்தினால், நிமோனியா காய்ச்சல், இன்புளூயன்ஸா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பையும், சிகிச்சைக்கான செலவையும் தடுக்கலாம்.இவற்றை அரசு வெளியில் வாங்குவதற்கு கோடிக்கணக்கில் செலவாகும். கொரோனா பெருந்தொற்றின் போது நிறைய ஆராய்ச்சி செய்து, தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு பெரும் தொகை செலவிடப்பட்டது.ஒவ்வொரு தடுப்பூசிக்கும் நிதி ஒதுக்கி செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவ ஆராய்ச்சி யூனிட்கள் செயல்படுகின்றன. காசநோய் ஒழிப்புக்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.குறைந்த விலைகுழந்தைகளுக்கான முக்கிய தடுப்பூசிகளை அரசே உற்பத்தி செய்ய வேண்டும். புதிய தடுப்பூசி உருவாக்குவதற்கு தான் நிறைய ஆராய்ச்சியும், நிதியுதவியும் தேவைப்படும். இதுபோன்ற தடுப்பூசிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால், அதற்கான காப்புரிமையை மட்டும் பெற்று உற்பத்தியை துவக்கலாம்.தடுப்பூசி உற்பத்தியை துவக்கும் போது, மருத்துவ உபகரணங்களுக்கும் இடவசதிக்கும் ஒருமுறை முதலீடு செய்தால் போதும். அதன்பின் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை, சந்தை மதிப்பை விட பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இதனால், அரசுக்கும் நிதிச்சுமை குறையும்.