உள்ளூர் செய்திகள்

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நகராட்சி மேலாளர் சுகுமாரன் வரவேற்றார்.நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பிரதிநிதி தவமணி பேசியதாவது:பள்ளி இடைநிற்றலை பெற்றோர் கண்டுகொள்ளாததால், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்தது அதன்மூலம், குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வீடுகளிலும் குழந்தைகளுக்கு உடல் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான, சிறிய வேலைகளை மட்டுமே செய்ய வைக்க வேண்டும்.பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் குறித்து தினசரி, ஆய்வு செய்யவும் வகையில் நட்பு ரீதியாக பேச முன் வரவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை, மறைக்காமல் பெற்றோரிடம் கூறுவர்.பெற்றோர் இல்லாதவர்கள் மற்றும் பெற்றோர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாதவர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதனை தகுதியுள்ள, 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதேபோல், பெற்றோர் குழந்தைகள் முன்பாக மது அருந்துவது, சண்டையிடுவது, வார்த்தைகளால் காயப்படுத்துவது, குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது போன்றவையும் குற்ற செயல்கள் ஆகும், இதனை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அறிவழகன் பேசுகையில், பெற்றோர் குழந்தைகளை கண்காணிப்பதுடன், பொது இடங்களில் ஏதேனும் தவறுகள் நடப்பதாக தெரிய வந்தால், மாவட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளை தொடர்ச்சியாக படிக்க வைக்கவும், படிக்க வைப்பதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உரிய ஆலோசனை பெறவும் முன் வரவேண்டும் என்றார்.தொடர்ந்து, நகராட்சி துணை தலைவர் நாகராஜ், வருவாய்த்துறை பணியாளர் ரபீக், நாவா பணியாளர் யோகேஸ்வரி, தையல் ஆசிரியர் சுலோச்சனா, மகளிர் குழு நிர்வாகிகள் விக்னேஸ்வரி, சத்தியா, சமூக ஆர்வலர் காளிமுத்து ஆகியோர் அறிவுரை வழங்கினர். நகராட்சி பணியாளர் சிந்துஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்