அரசு பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு குழு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: தமிழகத்தில் 38 மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பு தெரிவித்தது.தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரம் வழக்கறிஞர் ஷப்னா தாக்கல் செய்த பொதுநல மனு: பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாக்க தலைமையாசிரியர்கள் தலைமையில் ஆசிரியர், பெற்றோர், ஆசிரியரல்லாத ஊழியர், பள்ளி நிர்வாக பிரதிநிதியை கொண்ட பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்களை அமைக்க தமிழக அரசு 2021ல் அரசாணை வெளியிட்டது.இதன்படி போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்களை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஜூன் 5ல் விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு:மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடந்துள்ளன. பிற மாவட்டங்களில் விபரங்கள் சேகரிக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள், அரசாணைப்படி பிற மாவட்டங்களில் குழு அமைக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சாமிதுரை ஆஜரானார்.அரசு பிளீடர் திலக்குமார்: 38 மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது, என உத்தரவிட்டனர்.