உள்ளூர் செய்திகள்

நேபாள மாணவரின் கல்விக் கட்டணத்தை வழங்க கோர்ட் உத்தரவு

கோவை: ‘நேபாள மாணவர் செலுத்திய கல்விக் கட்டணம் ரூ. 1.8 லட்சத்தை, ரூ. 11 ஆயிரம் இழப்பீட்டுடன் ஒரு மாத காலத்தில் தர வேண்டும்’ என, கோவையைச் சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு கோவை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. நேபாளத்தைச் சேர்ந்தவர் உஜ்வார் கெய்ரே (21). கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள நேரு இன்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவர். 2007, ஆக. 27ல், ஏரோநாட்டிக்கல் படிப்பில் சேர்ந்தார். இதற்கு கல்வி கட்டணமாக ரூ.1.8 லட்சம் செலுத்தினார். மூன்று நாட்கள் மட்டுமே கல்லூரிக்குச் சென்றவர், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் நேபாளத்துக்கே சென்று விட்டார். அங்கிருந்து கல்லூரிக்கு வர இயலாது என தெரிவித்ததுடன், கல்லூரி நிர்வாகத்திடம் தான் செலுத்திய ஆவணங்கள் மற்றும் கல்வி கட்டணம் ஆகியவற்றை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பலமுறை கடிதம் வாயிலாகக் கேட்டும் பதில் இல்லாததால், சென்னை அண்ணா பல்கலையில் முறையிட்டார். இதன் பிறகே, கல்லூரி நிர்வாகம் மாணவரின் மாற்றுச் சான்றிதழை மட்டும் கொடுத்தது; கல்விக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டது. அதிருப்தி அடைந்த மாணவர், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, கோர்ட்டில் கல்லூரி நிர்வாகத்தினர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், யாரும் ஆஜராகவில்லை. வழக்கை நீதிபதி ஸ்ரீராமுலு விசாரித்தார். இறுதியில், ‘நேபாள மாணவர் உஜ்வார் கெய்ரே செலுத்திய கல்விக்கட்டணம் ரூ.1.8 லட்சத்தை வழங்க வேண்டும். இத்துடன், மாற்றுச் சான்றிதழ், கல்வி கட்டணம் வழங்காமல் சேவைக்குறைபாடு செய்ததற்காக ரூ.10 ஆயிரம் இழப்பீடு மற்றும் செலவுத்தொகை ஆகியவற்றை ஒரு மாத காலத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்