உள்ளூர் செய்திகள்

அச்சாகாத வினாத்தாளால் குரூப் - 4 தேர்வில் குளறுபடி

சென்னை: குரூப் - 4 தேர்வில், சில தேர்வு மையங்களில் சரியாக அச்சிடப்படாத வெள்ளை வினாத்தாள்கள் வழங்கியதால், தேர்வர்கள் கேள்வியே தெரியாமல் பதில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.20.37 லட்சம் பேர்தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர் என்ற வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில், 6,244 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கடந்த 9ம் தேதி குரூப் - 4 தேர்வு நடந்தது.மாநிலம் முழுதும், 7,247 மையங்களில், 20.37 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 16 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். மொத்தம், 200 கேள்விகளுக்கு, 300 மதிப்பெண் என்ற முறையில், சரியான விடையை தேர்வு செய்யும் வினாத்தாள் இடம் பெற்றது.இந்த தேர்வு நடந்த சில மையங்களில், தேர்வர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள் மற்றும் விடை எழுதும் ஓ.எம்.ஆர்., தாள்கள் வழங்கப்படவில்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வினா, விடைத்தாள் வழங்க தாமதமான தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு அறைகளில், தாமதத்துக்கு ஈடு செய்யும் நேரம் ஒதுக்கப்பட்டாமல், அனைவருக்கும் வழங்கப்பட்ட நேரத்திலேயே, தேர்வர்களிடம் இருந்து விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டன.இதனால், டி.என்.பி.எஸ்.சி., நிர்ணயித்த கால அவகாசம் தங்களுக்கு கிடைக்கவில்லை என, பாதிக்கப்பட்ட தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு புகார் தெரிவித்து உள்ளனர்.மாற்று நடவடிக்கைஇது மட்டுமின்றி, சில மாவட்டங்களின் தேர்வு மையங்களில், வினாத்தாள்கள் சரியாக அச்சிடப்படாமல் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், எழுத்துகள் சரியாக தெரியாமல், மிகவும் மங்கலாக இருந்துள்ளன.ஒவ்வொரு தேர்வறையிலும், நான்கு வகைகளாக வினாத்தாள் பிரித்து கொடுத்ததால், வேறு தேர்வரின் வினாத்தாளையும், சம்பந்தப்பட்ட தேர்வர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், வினா என்னவென்றே தெரியாமல், சில தேர்வர்கள் விடை எழுதி வந்துள்ளதாகவும், இந்த தவறுக்கு உரிய மாற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்