மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க லோன் மேளா
தர்மபுரி மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கிட லோன் மேளா ஆக.,19 காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்காவில் நடக்கிறது. கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் தரத்தை உயர்த்தி அவர்களை ஊக்குவிப்பதற்காக மருத்துவம், இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் வங்கி கடன் உதவிகள் வழங்க தேவையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவம், இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றமைக்கு அக்கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் அத்தாட்சியுடன், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அத்தாட்சியாக ரேஷன் கார்டு நகலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் நாளை நடக்கும் லோன் மேளாவில் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் அளிக்கலாம். விண்ணப்பங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் ஆய்வு செய்து தகுதியான மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.