புதிய ஐ.ஐ.டி.,கள் துவங்குவது பேரிடர்: பிரதமரின் ஆலோசகர்
புதுடில்லி: ஒரே ஆண்டில் எட்டு புதிய ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் துவக்குவது பேரிடர் என்று பிரதமரின் விஞ்ஞான ஆலோசகர் ராவ் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்கனவே 7 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) செயல்பட்டு வரும் நிலையில், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒரிசா, பிகார், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் புதியதாக 6 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டில் செயல்பட துவங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளும் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமரின் விஞ்ஞான ஆலோசகரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியருமான சி.என்.ஆர். ராவ் கூறுகையில், “ஒரே ஆண்டில் அதிக ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் தொடங்குவதில் எனக்கு திருப்தி இல்லை. இது பேரிடர். ஐ.ஐ.டி., துவங்குவது விளையாட்டல்ல. அதற்கு சரியான திட்டமிடல் அவசியம். இதுகுறித்து பிரதமரிடமும், மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடமும் தெரிவித்துள்ளேன்” என்றார்.