உள்ளூர் செய்திகள்

மாணவர் பேரவை தேர்தலுக்கு கல்லூரி முதல்வர்கள் எதிர்ப்பு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை.,யில் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் அக். 15ம் தேதி நடந்தது. பதிவாளர் சிங்காரம், பாடத்திட்டமேம்பாட்டுப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தவல்லி மகாதேவன் கலந்து கொண்டனர். பல்கலை துணைவேந்தர் தலைமை வகித்து பேசுகையில், ‘பல்கலைக் கழகம் என்பது பல துறைகளைக் கொண்டது போல, பல கல்லூரிகள் அடங்கியது கூட்டமைப்பு. பல்கலைக்கு கல்லூரிகள் என்ற அங்கம் மிக முக்கியமானது. நாம் மாணவர்கள் நலனுக்காக சிறந்த கருத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்கு ஒருமித்த முடிவெடுக்க யோசனை தெரிவிக்கலாம்’ என்றார். கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் டேவிட்அமிர்தராஜ் பேசுகையில், ‘சி.பி.எஸ்.சி., திட்டம், கல்லூரி மாணவர் தேர்தல் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் ஆசிரியர், அலுவலர் மேம்பாடு குறித்த பொருள் மீது முதல்வர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்’ என்றார். கல்லூரி முதல்வர்கள் கருத்து: சின்னப்பா (செந்தமிழ்க் கல்லூரி): சி.பி.சி.எஸ்., திட்டம் பற்றி அதிக கருத்துவேறுபாடு இல்லை. மாணவர் தேர்தல் நடத்தினால் பெண்கள் கல்லூரியில் பிரச்னையில்லை. ஆண்கள் கல்லூரியில் கலவரம் வரும். கல்லூரி முதல்வர்களுக்கு ஆசிரியர், மாணவர், நிர்வாகம் ஆகிய தரப்பில் பல்வேறு பிரச்னை வரும். இது போதாதென்று, பாடம், தேர்வுகள் நடத்த வேண்டும். இவ்வளவுக்கு மத்தியில் புதிய பிரச்னையை தேர்தல் உருவாக்கும். தேர்தல் நடந்தால் இருபாலரும் படிக்கும் கல்லூரியில் ஹீரோ பிரச்னை, ஆண்கள் கல்லூரியில் ஜாதி பிரச்னையால் கலவரம் வரும். தேர்தலால் ஜாதி, மதப் பிரச்னை வரும்போது அதனை எதிர்கொள்ளும் சக்தி எங்களுக்கு இல்லை. கல்லூரி முதல்வர்கள் பிரச்னைகளிலேயே கழிப்பதால் ஓய்வு பெற்று 2 ஆண்டுகளில் இறக்கும் நிலை உள்ளது. எனவே எங்களை காப்பாற்ற தேர்தல் நடத்தக்கூடாது. சுயநிதி பிரிவில் ஆசிரியர் சம்பளம் தொடர்பாக வற்புறுத்தக் கூடாது. ஏனெனில் கிராமப்புற கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட சீட்களைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்கின்றனர். நாராயணராஜா (சமூகஅறிவியல் கல்லூரி): லிங்கோத் கமிட்டி அறிக்கையை பல்கலை., கட்டாயப்படுத்த முடியாது. இக்கமிட்டி தேர்தல் குறித்து வட்டாரம், பல்கலை., பிரமுகர்கள் என 3 தரப்பில் கருத்து கேட்டது. 159 பல்கலை.,களில் கருத்து கேட்டதில் 79 பேர் எந்த கருத்தும் கூறவில்லை. 57 பேர் ஆதரவாகவும், 23 பேர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரீனிவாசன் (சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரி): 1989 வரை கல்லூரிகளில் ஸ்டிரைக் இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக இல்லை. லிங்கோத் கமிட்டி சிபாரிசுபடி கல்லூரி முதல் பல்கலை., வரை தேர்தல் நடத்த ஆகஸ்ட் முதல் மார்ச் வரை ஆகிவிடும். அதற்குள் கல்வி ஆண்டும் முடிந்துவிடும். கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கல்லூரி சூழ்நிலைக்கேற்ப தேவையெனில் தேர்தல் நடத்தலாம் என சுற்றறிக்கையே வந்துள்ளது. கமிட்டியின் சிபாரிசை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். பல்கலை., சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சுயநிதி கல்லூரி ஆசிரியர் மேம்பாட்டை பொறுத்தவரை பல்கலை., முடிவுபடி சம்பளம் வழங்கினால் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். சுயநிதி கல்லூரி என்பதே, அவரவர் வருமானத்தை வைத்து செலவு செய்ய வேண்டும் என்பதே. சி.பி.சி.எஸ்., பாடத்திட்டம் மாணவர்களின் மென்திறனை வளர்க்கும் வகையில் அமைய வேண்டும். சங்கரப்பன் (மன்னர் கல்லூரி): வேலைவாய்ப்பை தருமளவு சி.பி.சி.எஸ்., முறையில் பாடத்திட்டம் அமைந்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தப்பட்ட காலங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளன. 1973க்கு பின்னர் ஜாதி, மதக்கலவரம் எப்போது உருவாகுமோ என பயந்தபடியே கல்லூரி செல்லும் சூழல் இருந்தது. எங்கள் கல்லூரியில் ஏழை மாணவர்கள் பலர் படிக்கின்றனர். அவர்கள் மனநிம்மதி கெடும் வகையில் மாணவர் தேர்தலை நடத்தக் கூடாது. ஜெயதேவன் (எஸ்.என்., கல்லூரி, பெருங்குடி): சி.பி.சி.எஸ்., திட்டத்திற்கு தேவையான தகுதியான ஆசிரியர்கள், அடிப்படை கட்டமைப்புகள் சரியாக இருக்க வேண்டும். மேஜர் அல்லாத பாடங்களுக்கு 2 மணி நேரம் போதாது. சுயநிதி பிரிவை பொறுத்தவரை நல்ல சம்பளம் தந்தால் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பர். தேர்தலை பொறுத்தவரை அந்தந்த கல்லூரிகளின் சூழலை பொறுத்து நடத்தலாம். கவுசல்யா (சேர்மத்தாய் வாசன் கல்லூரி): சி.பி.சி.எஸ்., திட்டத்தை அமல்படுத்த மாணவர்களுக்கு வருகைபதிவு அவசியம். தேர்தல் வைத்தால் அதனை கெடுத்துவிடுவர். முடியாத உறுதிமொழிகளை தரும் மாணவர்கள், எதையும் செய்ய தயாராவர். கல்லூரி முதல்வர்கள் நிலைமை மோசமாகிவிடும். கல்லூரி, லயன்ஸ், ரோட்டரி என பல சங்கங்கள் தற்போது மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கின்றன. இதனைத் தாண்டி தேர்தல் அவசியமா? சுயநிதி ஆசிரியர் மேம்பாட்டை பொறுத்தவரை அனைத்து வருமானம், வசதிகளையும் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். செலவை மட்டும் பல்கலை., நிர்ணயிப்பது நியாயமா? மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் கேட்டால் வேறு கல்லூரிக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் சில பாடப் பிரிவுகளை மூடும் நிலை ஏற்படுகிறது. சுந்தரவேல் (தேவாங்கர் கல்லூரி, அருப்புக்கோட்டை): சுயநிதி பிரிவு வகுப்பை ரெகுலர் ஆசிரியர்கள் எடுக்கக்கூடாது என்கின்றனர். ரெகுலர் ஆசிரியர்களைக் காண்பித்துதான் கோர்ஸையே துவக்குகிறோம். சி.பி.சி.எஸ்., அமல்படுத்துவதால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அது எப்படி முடியும்? கிளஸ்டர் கல்லூரி ஏற்படுத்தும்படி கூறியுள்ளனர். இதில் ரெகுலர் ஆசிரியர் வகுப்பு எடுக்கலாம். ஆனால் தங்கள் கல்லூரியில் சுயநிதி பிரிவில் பாடம் நடத்த முடியாது என்பது முரண்பாடாக உள்ளது. வெங்கடராமன் (ராஜூக்கள் கல்லூரி, ராஜபாளையம்): லிங்கோத் கமிட்டி சிபாரிசு அமல்படுத்தினால் கேரளா, இமாச்சல பிரசேதம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இந்து முஸ்லிம் பிரச்னை ஏற்படும். பீகார், உ.பி., போன்ற மாநிலங்களில் அரசியல் கட்சி பிரச்னையாக உருவெடுக்கும். தமிழ்நாடு<, ஒரிசா போன்ற மாநிலங்களில் ஜாதிப் பிரச்னையாக உருவெடுக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத இப்பிரச்னையை நாம் ஏன் திணிக்க வேண்டும். மாணிக்கவேல் (விருதுநகர் இந்துநாடார் கல்லூரி): அந்தந்த கல்லூரியின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப தேர்தல் நடத்தும் முடிவை விட்டுவிட வேண்டும். தேர்தல் நடத்தினால் எனக்கு சர்க்கரை அளவு கூடிவிடும். தற்போது 150 ஆக இருப்பது பிப்ரவரி, மார்ச் வந்தால் 250 ஐ தாண்டிவிடும். முத்துசெல்வம்(எஸ்.பி.கே.கல்லூரி,அருப்புக்கோட்டை): எங்கள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். தேர்தல் வைப்பது அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும். மாணவர்களின் பெற்றோர் கண்ணீர்விட்டு அழும் சூழல் ஏற்படும். மாணவர்களிடையே ஒழுங்கீனம் உருவாகும். அந்த வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டாம். இஸ்மாயில் (ரமாதேவி கல்லூரி, திண்டுக்கல்): முதல்வர்கள் மாணவர் யூனியனுக்கு எதிரானவர்கள் அல்ல. மாணவர்கள் எங்கள் குழந்தைகளை போன்றவர்கள். கல்லூரி நன்கு நடைபெற வேண்டும். தேர்தல் நடத்தினால் ஜாதிக் கொடுமை தலைவிரித்தாடும். தமிழகத்தில் எத்தனை பல்கலை.,யில் மாணவர் யூனியன் உள்ளது. எங்குமே இல்லை. தேர்தலை திணிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மகாத்மான் (எஸ்.வி.என்., கல்லூரி, நாகமலை): ஷூ போட்டவருக்குத்தான் வலி தெரியும். எங்களையும் வாழவிடுங்கள். தேர்தல் விஷயத்தில் துணைவேந்தர் முகத்திலேயே முடிவும் தெரிகிறது. எங்கள் நாடித்துடிப்பை அறிந்து செயல்படுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் 45 கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர். ஒருவர் கூட பேரவை தேர்தல் வேண்டும் என பேசவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்