இன்டர்நெட்டை பயன்படுத்துவது மூளைக்கு நல்லது: விஞ்ஞானிகள் தகவல்!
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டனர். இன்டர்நெட்டை பயன்படுத்தும் போது நடுத்தர, மற்றும் முதியவர்களின் முடிவெடுக்ககும் மூளைக் கட்டுப்பாட்டு பகுதி தூண்டப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். செல்கள் திறன் இழத்தல், செல்கள் சுருங்குதல் போன்ற வயதானவர்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தடுக்கவும்கூட இது உதவியாக இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது என்பது சிக்கலான மூளைச் செயல்பாடு. அது மூளைக்குப் பயிற்சியாகவும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது என்று இந்த ஆய்வுக் குழுவின் தலைவரும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியருமான கேரி ஸ்மால் தெரிவித்துள்ளார். புத்தகங்களைப் படிக்கும் போதும், இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் போதும் 55 வயதிலிருந்து 76 வயது வரை உள்ள 24 பேரின் மூளைகள் ஸ்கேன் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கெனவே இன்டர்நெட்டை பயன்படுத்தி வருபவர்களுக்கும் இந்த ஆய்வுக்காக இன்டர்நெட்டை பயன்படுத்தியவர்களுக்கும் மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் திறன் குறைவு உள்ளிட்டவற்றைக் குறைக்க முளையைத் தூண்டும் செயல்பாடுகள் முறையாகச் செய்து வர வேண்டும் என்ற முந்தைய ஆராய்ச்சிக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் உள்ளன என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ரெபெக்கா உட் தெரிவித்துள்ளார். முதியோர் உளவியல் ஆய்வுக்கான அமெரிக்க ஆய்விதழில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.