உள்ளூர் செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவியர் எண்ணிக்கையே அதிகம்!

இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரில், 64 ஆயிரம் பேர் ஆண்கள்; ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் (62.48%) பெண்கள். ஒரு காலத்தில் கல்வியறிவில் பெண்கள் மிகவும் பின்தங்கியிருந்தனர். பள்ளிக் கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாக இருந்தது. பெண்கள் உயர் கல்வி பயில்வது மிகவும் அபூர்வமான விஷயமாக இருந்தது. ஆனால், தற்போது பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இந்த ஆண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவியரே அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில், மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 947 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்து ஆறாயிரத்து 178 பேர் பெண்கள். மீதமுள்ள 63 ஆயிரத்து 769 பேர் ஆண்கள். இந்த ஆண்டு, புதிதாக சேர்ந்தவர்களில் 37.52 சதவீதம் பேர் ஆண்கள்; 62.48 சதவீதம் பேர் பெண்கள். அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் இதே நிலையே நீடிக்கிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு, முதலாம் ஆண்டில் சேர்ந்த 32,365 பேரில், 11 ஆயிரத்து 699 பேர் ஆண்கள்; 20 ஆயிரத்து 666 பேர் பெண்கள். அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்த 65 ஆயிரத்து 600 பேரில், 25 ஆயிரத்து 300 பேர் ஆண்கள்; 40 ஆயிரத்து 300 பேர் பெண்கள். தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்த 72 ஆயிரம் பேரில், 26 ஆயிரத்து 800 பேர் ஆண்கள்; 45 ஆயிரத்து 200  பேர் பெண்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்துள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரில், 29 ஆயிரத்து 311 பேர் ஆதிதிராவிடர்; 2 ஆயிரத்து 692 பேர் பழங்குடியினர்; 81 ஆயிரத்து 323 பேர் பிற்படுத்தப்பட்டோர்; 33 ஆயிரத்து 362 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்; 23 ஆயிரத்து259 பேர் இதர பிரிவினர். இந்த ஆண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 63 ஆயிரத்து 769 ஆண்களில், 13 ஆயிரத்து 043 பேர் ஆதிதிராவிடர்; 863 பேர் பழங்குடியினர்; 27ஆயிரத்து 587 பேர் பிற்படுத்தப்பட்டோர்; 13 ஆயிரத்து 872 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்; 8, 404 பேர் இதர பிரிவினர். ஒரு லட்சத்து ஆறாயிரத்து 178 பெண்களில், 16 ஆயிரத்து 268 பேர் ஆதிதிராவிடர்; 1,829 பேர் பழங்குடியினர்; 53 ஆயிரத்து 736 பேர் பிற்படுத்தப்பட்டோர்; 19 ஆயிரத்து 490 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்; 14 ஆயிரத்து 855 பேர் இதர பிரிவினர். ‘முன்பு ஒரு வகுப்பில் 60 பேர் படிக்கிறார்கள் என்றால், அதில் 40 பேர் ஆண்களாக இருப்பர். தற்போது நிலைமை மாறியிருக்கிறது. வகுப்பில் உள்ள 60 பேரில், 35 முதல் 40 பேர் பெண்களாக இருக்கின்றனர்’ என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ கூறியதாவது:கடந்த 2003-04ம் ஆண்டுகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் ஆண்கள், பெண்கள் விகிதம் சரிசமமாக இருந்தது. கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பெண்கள் உயர்கல்வியில் சேருவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெண்கள் சதவீதம் அதிகரித்தும், ஆண்கள் சதவீதம் குறைந்தும் வருகிறது. பொறியியல் கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்கள் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் அதிகளவில் சேருகின்றனர். இவ்வாறு பொன்னவைக்கோ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்